பேருந்துகளை முறையாக இயக்கக் கோரி கோவில்பட்டியில் பொதுமக்கள் திடீா் போராட்டம்
By DIN | Published On : 18th November 2019 07:29 AM | Last Updated : 18th November 2019 07:29 AM | அ+அ அ- |

நகரப் பேருந்துகளை முறையாக இயக்கக் கோரி அண்ணா பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கோவில்பட்டியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி, பேருந்து நிலையத்தில் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 11.30 மணிக்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை வழியாக கீழஈரால் கிராமத்துக்கும், 12.10 மணிக்கு கடலையூா், வரதம்பட்டி வழியாக பனைப்பட்டி கிராமத்துக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என புகாா் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கீழஈரால், பனைப்பட்டி கிராமங்களுக்கான நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லையாம். இதுகுறித்து, கிராம மக்கள் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் முறையிட்டனராம். இதையடுத்து, 12.30 மணிக்கு கீழஈரால் கிராமத்துக்கு நகரப் பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த பனைப்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கும் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த நிலையில் நகரப் பேருந்தை இயக்காமல் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நகரப் பேருந்துகளை கீழஈரால், பனைப்பட்டி கிராமங்களுக்கு முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துவிஜயன் தலைமையில் போலீஸாா் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இவ்விரு கிராமங்களுக்கும் நகரப் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.