தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து கள ஆய்வு
By DIN | Published On : 01st September 2019 04:57 AM | Last Updated : 01st September 2019 04:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து அண்மையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கண்மாய்கள், நீர்நிலைகள், வரத்துக் கால்வாய்கள் போன்றவற்றை தூர்வாரும் பணிகளில் நீர் மேலாண்மை வல்லுநரான பொறியாளர் ஏ.சி. காமராஜ் மற்றும் அவரது வல்லுநர் குழுவினரின் ஆலோசனைகளை பெற்று செயல்படுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த பொறியாளர் ஏ.சி.காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளியில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், நவீன நீர்வழிச்சாலை அமைப்பு நிர்வாகிகள் கே. ராமச்சந்திரன், பொன்ராஜ், தனுவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை பார்வையிட்டு அதை தூர்வாரி மேம்படுத்துவது தொடர்பாக திட்டமிடுதல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. விவசாயப் பிரதிநிதியாக நீதிபதி எஸ். எஸ். சுந்தர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, பொறியாளர் ஏ.சி. காமராஜ் தலைமையிலான குழுவினர் கோரம்பள்ளம், பேய்க்குளம், ஆறுமுகமங்கலம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் 575 ஏக்கர் பரப்பளவும், 2000 ஏக்கர் பாசனமும் கொண்ட பேய்க்குளம் கண்மாயை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் திட்டமிட்டு முதலில் தூர்வாருவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் ஏ.சி. காமராஜ் பேசியது: அனைத்து நீர்நிலைகளிலும் முதலில் வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குடிமராமத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை இனியும் அனுமதிக்க கூடாது. பழுதான உபரிநீர் வெளியேறும் மதகுகளை சரிசெய்ய வேண்டும். ஆகாயத் தாமரைகளை நவீன இயந்திரங்கள் உதவியுடன் வேரோடு அகற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பை விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் அவசியம் செய்ய வேண்டும் என்றார் அவர்.