தீபாவளிக்கு முன்னதாக தமிழகத்தில் ஆன்லைன் திரைப்பட டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முத்து மாவட்டம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துத் துறை சார்பில் நடைபெறும் திட்டப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தீபாவளிக்கு முன்பு தமிழகத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் உள்துறை செயலர் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது குறித்து அறிவுறுத்தப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் அனைத்து முடிவுகளும் விசாரணை கமிஷனின் முடிவுகளை சார்ந்து இருக்கும். விசாரணை அறிக்கையில் என்ன கூறப்படுகிறதோ அதை அரசு நிச்சயமாக கவனத்தில் கொள்ளும்.
திரைப்பட நடிகராக தனது படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகிறார்கள். நடிகர் விஜய்யும் அப்படித்தான். அவருடைய படங்களை வெளியிடுவதற்கு அரசு உதவி செய்துள்ளது. நடிகர் விஜய் போன்றவர்களை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் விஜய் அவ்வாறு தன்னை நினைத்துக் கொண்டால், அது அவரது அறியாமை.
அரசியல்வாதிகளை தரக்குறைவாக விமர்சிக்கும் கமல்ஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்? அவர் அரசியல்வாதிகளை குறைசொல்லவில்லை. சட்டம், காவல், நீதித் துறைகளை குறைசொல்கிறார் என்பதே பொருள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.