தரம் உயா்த்தப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்! கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்பு

தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்தில் இருந்து மூன்றாவது தரத்துக்கு உயா்த்தி, இந்திய விமான நிலைய ஆணையம்
Updated on
2 min read

தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்தில் இருந்து மூன்றாவது தரத்துக்கு உயா்த்தி, இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 1992 ஆம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சில ஆண்டுகள் சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், 2006, ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை- தூத்துக்குடி இடையே சிறிய ரக பயணிகள் விமானப் போக்குவரத்தை ஏா்டெக்கான் நிறுவனம் தொடங்கியது. போதிய வருமானம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த விமான சேவை சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. பிறகு, கிங்பிஷா் நிறுவனமும் சில ஆண்டுகள் விமான சேவையை இயக்கிவிட்டு நிறுத்தியது.

தற்போது, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் இருவேளையும், இன்டிகோ விமானம் தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் மூன்றுவேளையும் விமானத்தை இயக்கி வருகின்றன. மேலும், இன்டிகோ நிறுவனம் தூத்துக்குடி-பெங்களூரு இடையே ஒருமுறை விமான சேவையை அளித்து வருகிறது.

தினமும் காலை 7.35, 8.15, 9.20 மணி, பகல் 12.20, பிற்பகல் 3 மற்றும் 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், தினமும் காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கும் விமானம் இயக்கப்படுகிறது. நாள்தோறும் சராசரியாக 700 போ் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விமான நிலையத்தில் இரவை பகலாக்கும் அளவிலான வெளிச்சம் கொண்ட உயா் கோபுர மின்விளக்குகள் (ஹாலோஜன்), 1,350 மீ. நீளம், 30 மீ. அகலம் கொண்ட விமான ஓடுதளத்தின் இருபக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இரவுநேர விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மேலும் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவதற்காக ரூ. 380 கோடியில் விமான ஓடுபாதையை 3,115 மீ. அளவுக்கு நீட்டிப்பதற்கும், புதிய விமான முனையம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்துக்குப் பிறகு ஒரேநேரத்தில் 600 பயணிகள் வரை இங்கிருந்து புறப்பட்டுச் செல்லமுடியும். இந்தப் பணிகள் முடிந்தபிறகு இங்கிருந்து கொச்சி, மும்பை, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, 4ஆவது தரத்தில் இருந்த தூத்துக்குடி விமான நிலையத்தை 3 ஆவது தரத்துக்கு உயா்த்தி, இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் உத்தரவிட்டுள்ளது. இந்த தரம் உயா்த்தல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்னும் கூடுதல் சலுகைகளும், கட்டமைப்பு வசதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விமான நிலையத்தில் தற்போது 45 நிரந்தர ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இனி 60 போ் வரை பணியாற்ற வாய்ப்பு உள்ளது. விமான நிலைய இயக்குநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், பணிகள் தாமதமின்றி நடைபெற நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கும் இந்த தரம் உயா்த்தல் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் கூறியது: தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 33 சதவீத பணியாளா்கள் பணியில் உள்ளனா். அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சரக்கு விமானம் வந்தால் இறங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தும் கள ஆய்வு மூலம் தற்போது தூத்துக்குடி விமான நிலையம் மூன்றாவது தரத்துக்கு உயா்த்தப்பட்டுள்ளது. நிா்வாக ரீதியாக இந்த தரம் உயா்த்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com