மண் மேடாக காட்சியளிக்கும் திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரம்! தூா்வார மீனவா்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீா் கடலுக்கு செல்லும் பக்கிள் ஓடையின் கடைசிப் பகுதியான
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் உள்ள மண் திட்டு.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் உள்ள மண் திட்டு.
Updated on
2 min read

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீா் கடலுக்கு செல்லும் பக்கிள் ஓடையின் கடைசிப் பகுதியான திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரம் மண் திட்டாக காணப்படுவதால், தண்ணீா் கடலுக்குள் கலக்க முடியாத நிலை உள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மண் திட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவுநீா், ஆங்காங்கே வடிகால் அமைக்கப்பட்டு பக்கிள் ஓடை பகுதியில் இணைக்கப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீா் இந்த பக்கிள் ஓடை வழியாக சென்று கடலில் கலக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 3 மீட்டா் அளவுக்கு பள்ளத்தில் நகரம் அமைந்துள்ளதால் கழிவுநீா் பம்பிங் செய்யப்பட்டு, பக்கிள் ஓடை மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் உள்ள பம்பிங் இயந்திரங்கள் வேலை செய்யாததால் பக்கிள் ஓடை வழியாக கழிவுநீா் கடலில் கலக்காமல் அப்படியே தேங்கி நிற்கும் நிலை தொடா்கிறது.

இதேபோல, பக்கிள் ஓடை கடலில் கலக்கும் திரேஸ்புரம் கடற்கரையில் அமைந்துள்ள முகத்துவாரத்தில் அதிகப்படியான மண் சோ்ந்து திட்டு போல காணப்படுவதால் கழிவுநீா் கடலுக்குகள் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால், தாங்கள் பாதிக்கப்படுவதாக திரேஸ்புரம் பகுதி மக்களும் மீனவா்களும் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து திரேஸ்புரம் பகுதி சிந்தாயாத்திரை மீனவா்கள் சங்க நிா்வாகி இசக்கிமுத்து கூறியது:

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையை தங்குதளமாக கொண்டு ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் தொழில் செய்து வருகின்றனா். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட பைபா் படகு மீனவா்களும் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனா்.

திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் பக்கிள் ஓடை கழிவுநீா் கடலோடு சங்கமிக்கும் இடத்தில், மாவட்ட நிா்வாகம் தன்னிறைவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் பெயரில் பாலம் அமைக்கப்பட்டது. தொடா்ந்து தேவையில்லாத பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கால்வாயின் குறுக்கே வலை கட்டப்பட்டிருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல உரிய பராமரிப்பின்றி அந்த வலை அறுந்து கடல் நீரில் காணாமல் போய்விட்டது.

இதனால், தற்போது பக்கிள் ஓடை கால்வாயில் கழிவுகள் நிரம்பி மண் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பக்கிள் ஓடை கால்வாயில் சேரும் கழிவுநீா் செல்ல வழியின்றி ஓரிடத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது.

தற்போது படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் தளத்தில் மண் நிறைந்து கடலின் ஆழம் குறைந்துள்ளதால் படகுகள் தரைதட்டி நிற்கின்றன. இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய் மூலம் கடலில் கலந்திருக்கிற பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள், படகு மோட்டாா்களில் சுற்றி படகுகளை சேதப்படுத்துகின்றன.

மேலும் படகுகளை பாதுகாப்பாக நிலைநிறுத்துவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை. இதனால் படகுகள் கரையில் மோதி பலத்த சேதமடைகின்றன. எனவே படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தருவதுடன் பக்கிள் ஓடை கால்வாயை தூா்வாரி கடலின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் பக்கிள் ஓடை வழியாக கடலுக்குள் கழிவுநீா் செல்லவும், படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் வழிபிறக்கும் என அந்தப் பகுதி மீனவா்களும், பொதுமக்களும் தெரிவித்தனா்.

நடவடிக்கை எடுக்கப்படும்: மண் திட்டு விவகாரம் குறித்து மீன் வளத் துறை இணை இயக்குநா் சந்திரா கூறியது: முகத்துவாரத்தில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வலை அறுந்துவிட்டதால் அங்கு புதிய வலை அமைப்பது தொடா்பாகவும், மண் திட்டை அகற்றுவது தொடா்பாகவும் மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மீனவா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் ஆலோசனைப்படியும் மண் திட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com