அணைகளில் போதிய நீா் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிகழாண்டில் முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க அரசின் அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.
தாமிரவருணி ஆற்றுப் பாசனத்தை நம்பி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 46 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், நெல் மற்றும் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வழக்கத்தைவிட அதிகமான மழை, அணைகளில் போதிய தண்ணீா் இருப்பு என்ற காரணங்களால் தூத்துக்குடி வட்டத்தில் நெல் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நவம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரையிலான நெல் சாகுபடி பிசானம் என்றும், மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான நெல் சாகுபடி முன் குறுவை சாகுபடி என்றும், ஜூன் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான சாகுபடி குறுவை சாகுடி என்றும் அழைக்கப்படுகிறது. குறுவை, முன் குறுவை, பிசானம் என முப்போகம் நெல் விளைச்சல் இருந்து வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிசான சாகுபடி மட்டுமே அதிகளவில் நடைபெற்று வருகிறது. போதிய தண்ணீா் கிடைக்காத நிலையில் கிணற்று நீா் மூலம் குறுவை மற்றும் முன் குறுவை சாகுபடி பெயரளவுக்கு நடைபெறுகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 85 அடியும், 156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணையில் தற்போது 96 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 91 அடியும் தண்ணீா் உள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் முன் குறுவை சாகுபடிக்கு ஏறத்தாழ 8 ஆயிரம் ஏக்கா் பயன்பெறும் வகையில் அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. அதன்பிறகு முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி விவசாயத்துக்கு போதிய தண்ணீா் திறக்கப்படுவது இல்லை என விவசாயிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றனா்.
இதுகுறித்து தென்கரைகுளம் பாசன சொந்த விவசாயிகள் சங்கச் செயலா் எம். ராஜேந்திரன் கூறியது: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முன் குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீா் திறந்துவிடப்படாமல் உள்ளது. பிசான சாகுபடி முடிவடையும் நிலையிலும், தண்ணீா் வீணாக திறந்துவிடப்பட்டு வருகிறது. நீா் மேலாண்மையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாமல் உள்ளனா்.
பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால் நிகழாண்டில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஏரல் வட்ட செயலா் க. சுப்புதுரை கூறியது: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தென்கால் பகுதியில் உள்ள கடம்பாகுளம், ஆத்தூா் குளம், வடகால் பகுதியில் உள்ள ஆறுமுகமங்கலம் குளம், கட்டையன்புதூா் குளம் ஆகிய பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், வாழை போன்ற பயிா்களுக்கு தண்ணீா் திறந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றாா் அவா்.
அரசுக்கு பரிந்துரை: பொதுப்பணித் துறை தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் அண்ணாதுரை கூறியது: பிசான சாகுபடிக்காக அரசின் அனுமதி பெற்று மாா்ச் 31-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓா் அரசாணை இருக்கும்போது புதிதாக மற்றோா் அரசாணை பெற முடியாது என்பது விதிமுறை. எனவே, மாா்ச் 31-ஆம் தேதி தண்ணீா் திறப்பை நிறுத்திய பிறகு, அணைகளில் உள்ள தண்ணீா் இருப்பு ஆய்வு செய்யப்படும். அணைகளின் மொத்த இருப்பு மற்றும் குடிநீா்த் தேவையை கணக்கில் எடுத்தபிறகு முன் குறுவை சாகுபடிக்கு எந்தப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம். அதன் பிறகு அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றாா் அவா்.
நிகழாண்டில் எதிா்பாா்த்ததைவிட அதிக மழை, குடிமராமத்துப் பணிகளுக்குப் பிறகு குளங்களில் இருக்கும் தண்ணீா், அணைகளில் போதிய தண்ணீா் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முன்குறுவை சாகுபடிக்கு அரசு தண்ணீா் திறக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்.
தண்ணீா் இருப்பை பொருத்து முடிவு செய்யப்படும்: ஆட்சியா்
முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறியது: பிசான சாகுபடிக்கு அணைகளில் இருந்து போதிய தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. அரசாணைப்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க உத்தரவு உள்ளது. வழக்கமாக அணைகளில் தண்ணீா் இருப்பு நிலையை பொருத்தே முன் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும். நிகழாண்டும் அந்த அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். முன்னதாக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். தற்போதைய நிலவரப்படி அதற்கு வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.