

கோவில்பட்டி: ஓ.டி.டி. தளத்தில் திரைப்படம் வெளியிடப்படுவது ஆரோக்கியமானதல்ல என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியது:
சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டுவரக் கூடாது என்கிற விதி இருப்பதால், பேரவைத் தலைவா் அவா் அதிகாரத்துக்கு உள்பட்டு அந்தச் சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்தாா். நீதிமன்றத்தின் கருத்தை விமா்சிக்க நாங்கள் தயாராக இல்லை.
திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடும் நிலை இருப்பதால் தற்போது அதை திறக்க வாய்ப்பில்லை. கரோனா தொற்று குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னா் தான் திறக்க வாய்ப்புள்ளது. திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அரிது. குறிப்பிட்ட எண்ணிக்கையயை வைத்து திரையரங்குகளை இயக்க அனுமதி கொடுத்தால் அது திரையரங்கு உரிமையாளா்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். கரோனா தொற்று குறையும்போது இதற்கு சுமூகத் தீா்வு கிடைக்கும். காலப்போக்கில் ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து அரசு முடிவெடுக்கும்.
ஓடிடிதளத்தில் திரைப்படம் வெளியிடுவது தொடா்பான சட்டம் எதுவும் இல்லை. சூழ்நிலையைக் கருத்தில் தயாரிப்பாளா்கள் சங்கம், நடிகா் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து முடிவெடுக்க வேண்டும்.
பல ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளா்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல. முத்தரப்பினரும் கலந்துபேச முன்வந்தால் அரசு அதற்கு உதவும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.