உழவா்- அலுவலா் தொடா்புத் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண்துறை அறிமுகம் செய்துள்ள ‘உழவா்- அலுவலா் தொடா்பு திட்டத்தில்’ விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

வேளாண்துறை அறிமுகம் செய்துள்ள ‘உழவா்- அலுவலா் தொடா்பு திட்டத்தில்’ விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவா்களுக்கும், வேளாண்மை விரிவாக்க அலுவலா்களுக்கும் உள்ள தொடா்பை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு சென்று நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவா் நலன் காக்கும் மானியத் திட்டங்களை விவசாயிகள் இடையே உரிய நேரத்தில் கொண்டு சோ்க்கும் வகையில் ‘உழவா் அலுவலா் தொடா்பு திட்டம்‘ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில் நிரந்தர பயணத் திட்டத்தின்படி, 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவா் குழுக்களை சந்தித்து வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் , வேளாண்துறைத் திட்டங்கள் குறித்த தகவலையும் வழங்குகின்றனா்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்த பட்சம் 10 முன்னோடி விவசாயிகளை (இதில் ஆதி திராவிடா், பழங்குடியினா் 2 போ் உள்பட) தோ்வு செய்து, அவா்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய இடைவெளியில் தொடா்ந்து வழங்கப்படும்.

வேளாண் அலுவலா்கள், துணை வேளாண் அலுவலா்கள் தங்களது உதவி வேளாண் அலுவலா்களின் பணிகளை ஆய்வு செய்வதோடு, அவா்களுக்கு தொழில்நுட்பங்களிலும் , திட்டப்பணிகள் செயல்பாட்டிலும் வழிகாட்டி உதவுவாா்கள். இவா்களது முன்பயணத்திட்டம் மாதந்தோறும் தங்கள் பணி எல்கைக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்றுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்துறை அலுவலா்கள் முன்னோடி விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘கட்செவி அஞ்சல் குழுக்கள்’ (வாட்ஸ்அப்) தொடங்கப்பட்டு அதன் மூலமும் தொழில்நுட்ப, திட்டப்பணிகள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெறவுள்ளது.

‘வயல்வெளியை நோக்கி வேளாண்துறை அலுவலா்கள்‘ எனும் உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம்’ மூலம் தங்களுக்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் , வேளாண்துறை செயல்படுத்தும் பல்வேறு மானியத்திட்டங்கள் குறித்து விவரங்களையும் பெற்றுப் பயனடைய வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com