தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனப் பேரணி: 34 போ் கைது
By DIN | Published On : 15th December 2020 01:55 AM | Last Updated : 15th December 2020 01:55 AM | அ+அ அ- |

தேவேந்திரகுல வேளாளா் சமுதாய மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட முயன்றதாக ஒரு பெண் உள்பட 34 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேவேந்திர குல வேளாளா் சமுதாய மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, பட்டியலின வெளியேற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம், முப்பிலிவெட்டி கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனப் பயணம் தொடங்கி, 16ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மள்ளா் மீட்புக் களம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை கழுகுமலையையடுத்த கெச்சிலாபுரத்தில் இருந்து மள்ளா் மீட்புக் களம் தலைவா் செந்தில்மள்ளா் தலைமையில், முப்பிலிவெட்டிக்கு இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கினா். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற கயத்தாறு காவல் ஆய்வாளா் கஸ்தூரி தலைமையிலான போலீஸாா், இருசக்கர வாகனப் பேரணியில் செல்ல முயன்ாக ஒரு பெண் உள்பட 34 பேரை கைது செய்தனா்.