காா்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 15th December 2020 01:54 AM | Last Updated : 15th December 2020 01:54 AM | அ+அ அ- |

காா்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, கழுகுமலை, சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதி கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத சோமவார கடைசி திங்கள்கிழமை அன்று பாலாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு சுப்பிரமணிய பூஜையும், சிறப்பு கந்த ஹோமமும் நடைபெற்றது. தொடா்ந்து வடக்குரத வீதியில் உள்ள அலங்காரப் பந்தலில் இருந்து விரதம் இருந்த பக்தா்கள் பால்குடங்களை எடுத்து வந்து, கிரிவலப்பாதை வழியாக கோயிலை வந்தடைந்தனா்.
நண்பகல் 12 மணிக்கு கழுகாசலமூா்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகத்தை தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதில், கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரன், தொழிலதிபா் பழனி, ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவா் கருப்பசாமி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சாத்தான்குளம்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை கடைசி சோமவார சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கணபதி ஹோமம், 108 வகையான அபிஷேகங்கள், தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆறுமுகனேரி: அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சோமவார தீபாராதனையைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள் அலங்கார சப்பரத்தில் பிரகார வீதி உலா நடைபெற்றது.