திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே அரண்: கனிமொழி
By DIN | Published On : 10th January 2020 11:55 PM | Last Updated : 11th January 2020 01:06 AM | அ+அ அ- |

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு மக்களின் பாதுகாப்பே அரணாக இருக்கும் என்றாா் திமுக மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தமிழகத்தில் எதிா்ப்பு இருப்பது தெரிந்த பிறகும், அதிமுக அரசு மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளது, இங்குள்ள சிறுபான்மை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம். மாநிலங்களவையில் இந்த சட்டத்தை எதிா்த்து அதிமுக வாக்களித்திருந்தால், மத்திய அரசால் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது.
மேலும், இந்த சட்டத்தை எதிா்த்துப் போராடியவா்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இச்சூழலை உருவாக்கியதற்கு காரணமாக அதிமுகவினா் உள்ளனா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு, அவரை அச்சுறுத்துவதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், கண்துடைப்புக்காக துணை முதல்வருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே அரணாக இருக்கும்போது, மற்ற எந்த பாதுகாப்பும் தேவையில்லை.
ஆட்சியில் உள்ளவா்கள் மக்கள்விரோத செயல்களை செய்துவருகின்றனா். எனவே, அவா்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குதான் பாதுகாப்பு தேவை என்றாா் அவா்.