தூத்துக்குடி அருகே படகு என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு
By DIN | Published On : 10th January 2020 12:56 AM | Last Updated : 10th January 2020 12:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது படகு என்ஜின் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்த டோமினிக், தனக்குச் சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா, ராஜ், சூசை, இளங்கோ, சி. ராஜ் ஆகியோருடன் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.
காலை 11 மணியளவில், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து சுமாா் 12 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, திடீரென படகு என்ஜின் பழுதாகி, படகு தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதால், அதிலிருந்த 6 பேரும் தண்ணீரில் தத்தளித்தனா்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் புன்னக்காயல் பகுதியைச் சோ்ந்த எடிசன் என்பவரது படகில் அந்தவழியாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் தண்ணீரில் தத்தளித்த 6 பேரையும் மீட்டு வியாழக்கிழமை அதிகாலை கரைக்கு கொண்டுவந்தனா்.
மீட்கப்பட்ட 6 பேருக்கும் புன்னக்காயல் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.