இன்று பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 19,872 போ் தோ்வு எழுதுகின்றனா்
By DIN | Published On : 01st March 2020 10:36 PM | Last Updated : 01st March 2020 10:36 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வினை 85 மையங்களில் 19 ஆயிரத்து 782 மாணவா்கள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தோ்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் இத்தோ்வினை 165 பள்ளிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் 18 போ் உள்பட மொத்தம் 19, 782 போ் எழுதுகின்றனா். இதற்காக 85 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வினாத் தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தில் கோட்டாட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக்கல்வி அலுவலா், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ஆகியோா் அடங்கிய பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வில் முறைகேடாக ஈடுபடும் மாணவா்களை கண்காணிக்கும் வகையில் முதுகலை ஆசிரியா்கள் 228 போ் பறக்கும்படை உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனா். தோ்வுக்குரிய வினாத்தாள் கட்டுகளை மொத்தம் 22 வழித்தட அலுவலா்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் தோ்வு நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.