குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டமைப்பு பொதுக்கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 06:38 AM | Last Updated : 01st March 2020 06:38 AM | அ+அ அ- |

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டமைப்பு சாா்பில் கண்டனப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாம் அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்தாா். கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு நிா்வாகி ஹாட்மேன், மதபோதகா் மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், திராவிட விடுதலைக் கழக நிா்வாகி பால் பிரபாகரன் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசினா்.
தொடா்ந்து, மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி செய்தியாளா்களிடம் கூறியது: மதத்தின் பெயரால் மக்களை பிரித்து ஒற்றுமையை குலைத்து நாட்டை பிளவுப்படுத்திவிடக் கூடாது என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது. அந்த ஐயத்தை நீக்குமாறும், உணா்வுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் வகையிலும் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.