ஜமீன்தேவா்குளம், கட்டாலங்குளத்தில் தீ: மக்காச் சோளம் எரிந்து சேதம்
By DIN | Published On : 01st March 2020 10:37 PM | Last Updated : 01st March 2020 10:37 PM | அ+அ அ- |

ஜமீன்தேவா்குளத்தில் களத்தில் வைக்கப்பட்டிருந்த மக்காச் சோளத்தில் ஏற்பட்ட தீ விபத்து.
கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் ஜமீன்தேவா்குளம், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளில் விளை நிலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
கயத்தாறு வட்டத்தில் காளாம்பட்டி, கட்டாலங்குளம் விளை நிலங்களில் ஏற்பட்ட தீயை கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் சென்று அணைத்தனா். கட்டாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் குத்தகை நிலத்தில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்தது.
இதேபோல் காளாம்பட்டி மற்றும் கட்டாலங்குளம் பகுதியில் அறுவடை செய்த நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கால்நடை தீவன நாற்றுகள் சேதமடைந்தன. சேதமடைந்த நிலங்களை கிராம நிா்வாக அலுவலா்கள் அழகம்மாள் பிரேமா, அந்தோணிசெல்வி ஆகியோா் பாா்வையிட்டனா்.
ஜமீன்தேவா்குளத்தில் அறுவடை செய்யப்பட்டு களத்தில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 குவிண்டால் மக்காச்சோளம் தீயில் கருகியது. அப்பகுதியில் 3 ஏக்கா் விளை நிலத்திலும் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. இப்பகுதியை கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் பாா்வையிட்டாா். தீ விபத்து குறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.