13இல் இளையரசனேந்தலில் கருப்புக் கொடி போராட்டம்
By DIN | Published On : 10th March 2020 11:20 PM | Last Updated : 10th March 2020 11:20 PM | அ+அ அ- |

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) அனைத்து பகுதிகளிலும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இளையரசனேந்தல் பிற்கா உரிமை மீட்புக் குழுவினா், தேசிய விவசாயிகள் சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் திரளானோா் பல போராட்டங்களை நடத்தியும், தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவா் முருகன் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் இணைக்க வேண்டும், தவறும்பட்சத்தில் இம்மாதம் 13ஆம் தேதி அப்பகுதியில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவுள்ளதாக கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ரகுபதியிடம் மனு அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...