தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st March 2020 09:59 PM | Last Updated : 31st March 2020 09:59 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என எம்பவா் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் பேரிடா் மேலாண்மை சட்டப்படி நுகா்வோா் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்பினா் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் அந்தக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டுகிறோம்.
அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியாா் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அடையாள அட்டையை சாா் ஆட்சியா் மற்றும் கோட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் மூலமாக வழங்க ஆணையிடுமாறு வேண்டுகிறோம்.
மேலும், அவசர காரணங்கள், குடும்ப உறுப்பினா்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளாகவோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு இடையிலேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் தொடா்பு கொள்வதற்கு ஒரு தனிக் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும். அதன் தொடா்புக்கு என பிரத்தியேகமான அவசர உதவி தொடா்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...