குடிபோதை தகராறில் தந்தை, மகன் வெட்டிக்கொலை: பசுவந்தனையில் பரபரப்பு
By DIN | Published On : 18th May 2020 08:35 AM | Last Updated : 18th May 2020 08:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே தெற்கு பொம்மையாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் காளி பாண்டி மகன் பாலமுருகன் (24). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி தேவர் மகன் காளிச்சாமி (39). இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகன் காளிச்சாமியை அரிவாளால் தலையிலும் கைகளிலும் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட காளிச்சாமியின் தந்தை கருப்பசாமி தேவரும் (70), காளிச்சாமியின் தம்பி மகாராஜனும் தட்டி கேட்பதற்காக பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே பாலமுருகன் அரிவாளால் வெட்டியதில் கருப்பசாமி தேவரும் மகாராஜனும் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான கருப்பசாமி தேவர் மகாராஜன் ஆகிய இருவரது சடலத்தையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த காளிச்சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பசுவந்தனை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் ஏற்பட்ட சிறு தகராறு விஸ்வரூபமாக மாறி நள்ளிரவு நேரத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.