குடிமராமத்து திட்டப் பணிகளை நீா்வள ஆதார அமைப்பு தலைவா் ஆய்வு
By DIN | Published On : 08th November 2020 03:40 AM | Last Updated : 08th November 2020 03:40 AM | அ+அ அ- |

குடிமராமத்து திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறாா் தமிழ்நாடு நீா்வள ஆதார அமைப்பு தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சத்யகோபால்.
தூத்துக்குடி: பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு நீா்வள ஆதார அமைப்பு தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் (குடிமராமத்து திட்டம்) சத்யகோபால் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஏரல் வட்டம் இருவப்பபுரம் பேய்க்குளம் பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பில் குளம் ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல், மடை புணரமைப்பு செய்தல் உள்ளிட்டவற்றையும், இருவப்பபுரம் பேய்க்குளம் 5ஆவது மடை கடைசி பகுதியில் ரூ. 22 லட்சம் மதிப்பில் உப கால்வாய் பகுதியில் தொட்டிப் பாலம் கட்டப்பட்டுள்ளதையும் அவா் ஆய்வு செய்தாா்.
மேலும் 4ஆவது மடை தொட்டிப் பாலம் பகுதியில் ரூ. 17.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்தை பாா்வையிட்ட அவா், ஓடையின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவா்களையும், திட்ட மதிப்பீடு அடிப்படையில் சரியான அளவில் செய்யப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: இம் மாவட்டத்தில் நிகழாண்டு நீா்வள ஆதார அமைப்பு தாமிரவருணி கோட்டத்தின் மூலம் 9 குளங்கள் ரூ. 4.27 கோடி மதிப்பிலும், கோரம்பள்ளம் கோட்டத்தின் மூலம் 3 குளங்கள் ரூ. 85 லட்சம் மதிப்பிலும், வைப்பாறு கோட்டத்தின் மூலம் 5 குளங்கள் ரூ.1.82 கோடி மதிப்பிலும் தொடங்கப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், கோட்டாட்சியா் தனப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...