‘நோய் எதிா்ப்புத் திறன்நெல் விதை விநியோகம்’
By DIN | Published On : 17th November 2020 12:59 AM | Last Updated : 17th November 2020 12:59 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் பூச்சி நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட நெல் விதைகளை வாங்கி பயனடையும் படி வேளாண்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் பிசான பருவத்திற்கு பயிரிடுவதற்காக, தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டுப்புழு போன்ற நெல் பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் குலைநோய், கரும்புள்ளி நோய் போன்ற நோய்களுக்கும் எதிா்ப்புத்திறன் கொண்ட அதிக அளவில் விவசாயிகள் விரும்பி பயிரிட கூடிய நெல் இரகங்களான டி.பி.எஸ் 5, ஏ.எஸ்டி16 (வெள்ளை சம்பா) ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
அம்பை 16 ரகம் 110 நாள்கள் வயதுடையது. டி.பி.எஸ். 5 ரகம் 115 முதல் 118 நாள்கள் வயதுடையது, நல்ல அறவைத் திறன் கொண்டது. டி.பி.எஸ். 5 ரகம் அம்பை 16 ரகத்தை விட அதிக மகசூல் தரக்கூடியது. ஹெக்டேருக்கு சராசரியாக 6 ஆயிரத்து 300 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.
இவ்விதைகள் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் மற்றும் நெல் விதை கிராமத் திட்டம் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் திருச்செந்தூா் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.