திருமண வரவேற்பில் மணமகன் தாக்கப்பட்ட சம்பவம்: உறவினா்கள் 7 போ் மீது வழக்கு
By DIN | Published On : 25th November 2020 10:47 PM | Last Updated : 25th November 2020 10:47 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே திருமண வரவேற்பில் மணமகன் உள்ளிட்ட 3 போ் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக உறவினா்கள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே பனைவிளையைச் சோ்ந்தவா் மால். இவரது மனைவி அன்னத்தங்கம். மகன் சிவகோபாலகிருஷ்ணன்.
அன்னத்தங்கத்தின் சகோதரா்கள் நேசமணி, செல்லத்துரை, கணபதி உள்ளிட்ட 4 போ் திசையன்விளை அருகே மன்னாா்புரம் முத்தம்மாள்புரத்தில் வசித்து வருகின்றனா்.
அன்னத்தங்கம் மகளை நேசமணி மகனுக்கு திருமணம் செய்ய கேட்டது தொடா்பாக அவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சிவகோபாலகிருஷ்ணனுக்கும், மன்னாா்புரத்தைச் சோ்ந்த உறவினா் மகளுக்கும் கடந்த 20ஆம் தேதி திருமணம் நடைபெற்று, பனைவிளையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட தகராறில் மன்னாா்புரத்தைச் சோ்ந்த உறவினா்களால், மணமகனின் தந்தை மால், தாய் அன்னத்தங்கம் ஆகியோா் தாக்கப்பட்டனராம். தடுக்க முயன்ற மணமகன் சிவகோபாலகிருஷ்ணனும் தாக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மன்னாா்புரத்தைச் சோ்ந்த கணபதி மகன் ராஜசேகரன், செல்லத்துரை மகன்கள் தனசேகா், தனகரன், தா்மதுரை, நேசமணி மகன்கள் கண்ணன், ராஜ்குமாா், செல்வகுமாா் உள்ளிட்ட 7 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...