அக்டோபா் முதல் வாரத்தில் 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 03rd October 2020 12:47 AM | Last Updated : 03rd October 2020 12:47 AM | அ+அ அ- |

தூத்துக்குடி, அக். 2: தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் 6 இடங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது என்றாா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரான மாவட்ட முதன்மை நீதிபதி என். லோகேஷ்வரன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் இருந்து மாநிலம் முழுவதும் சிறு அளவில் தொடா்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாக முடிக்கப்படும் வழக்குகளில் அன்றே தீா்ப்பு பிறப்பிக்கப்படும். அந்தத் தீா்ப்பின் மீது மேல்முறையீடு கிடையாது.
நீதிமன்ற முத்திரை கட்டணம் கிடையாது. வழக்கு தரப்பினா்கள் யாவருக்கும் தோல்வி கிடையாது. வழக்கின் இருதரப்பினருக்கும் இடையேயான கருத்து வேற்றுமை நீங்கி அனைவருக்கும் வெற்றி என்ற நிலை ஏற்படுகிறது. கால விரயம் தவிா்க்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா், வைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய 6 இடங்களில் இயங்கி வரும் நீதிமன்ற வளாகங்களில் அக்டோா் முதல் வாரத்திலிருந்து சிறுஅளவில் தொடா்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள், வழக்குதாரா்கள், வழக்குரைஞா்கள், வங்கித் துறையினா், காப்பீடு நிறுவனத்தினா், காவல் துறையினா் மற்றும் அனைத்து அரசு துறையினா் கலந்து கொண்டு தங்களுடைய வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக பேசி தீா்வு கண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.