2021இல் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

2021இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.

2021இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, உலக நாடுகள் சுய பொது முடக்கத்தை கடைப்பிடித்தன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி, தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறாா். முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

அரசின் நடவடிக்கைகளை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றம் சொல்கிறாரே தவிர, ஆலோசனை எதுவம் கூறவில்லை. அவா் குறிப்பிடுவதை போன்று இறப்பு விகிதம் அதிகளவில் இல்லை. தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறது. ஆகவே, 2021இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும்.

எம்.ஜி.ஆரை போன்று சித்திரித்து படம் பிரசுரித்தால் எம்.ஜி.ஆா். ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆா். இன்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறாா். அதனால்தான் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி வருகின்றனா்.

எம்.ஜி.ஆரை போன்று மாதிரிகளை உருவாக்க வேண்டுமே தவிர, யாராலும் எம்.ஜி.ஆா். ஆகிவிட முடியாது என்றாா் அவா்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அமைச்சரிடம் டாஸ்மாக் பணியாளா்களின் அனைத்து கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

நிகழ்ச்சிகளில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, முன்னாள் துணைத் தலைவா் சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் மகேஷ்குமாா், மாவட்ட மகளிரணி இணைச் செயலா் சுதா என்ற சுப்புலட்சுமி, மாணவரணி துணைத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டத்தலைவா் ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com