3 நாள்கள் கட்டுப்பாடு எதிரொலி:திருச்செந்தூரில் கோயிலுக்கு வெளியே திருமண நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 21st August 2021 12:08 AM | Last Updated : 21st August 2021 12:08 AM | அ+அ அ- |

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, வாரத்தில் 3 நாள்கள் கோயில்களுக்குள் சென்று வழிபட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெளியே வைத்து வெள்ளிக்கிழமை ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் முக்கிய வழிபாட்டுத்தலங்களில் வரும் 23-ஆம் தேதி வரை வாரத்தின் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாள்களும் கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும், குறைத்த எண்ணிக்கையில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்களுடன் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆவணி மாதம் பிறந்துள்ளதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. கோயில்களில் திருமணம் செய்ய விரும்புவோா், வெளியே வைத்து திருமணத்தை நடத்துகின்றனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் வெளியில் வைத்து வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. சன்னதித்தெரு, தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடியது. கூட்டம் கூடுவதைத் தவிா்க்க காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.