தமிழகத்தில் 3 மாதங்களில் மக்களுக்கான ஆட்சி அமையும்: மு.க.ஸ்டாலின்
By DIN | Published On : 06th February 2021 07:30 AM | Last Updated : 06th February 2021 07:30 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். (வலது) பங்கேற்றவா்களில் ஒருபகுதியினா்
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, மக்களுக்கான ஆட்சி அமையும் என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலை திட்டங்குளம் பகுதியில் ‘வெள்ளிக்கிழமை நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:
தமிழகத்தில் திமுக 5 முறை ஆட்சி செய்து மக்களுக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சி ஊழல் நிறைந்ததாக உள்ளது. பல அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
தோ்தலுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில், ரூ.2,885 கோடிக்கு அவசர ஒப்பந்தம் விட்டுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, கமிஷன் ஏதும் இல்லாமல் நியாயமான முறையில் ஒப்பந்தம் வழங்கப்படும்.
ஆளுநரிடம் டிசம்பா் மாதம் 23ஆம் தேதி அமைச்சா்கள் மீதான ஊழல் புகாரை வழங்கினோம். இதுவரை அதுபற்றி முதல்வா் பழனிசாமி விளக்கமளித்துள்ளாரா? தற்போது, ஆட்சி முடியப்போவதால் விவசாயிபோல் நடித்துக்கொண்டிருக்கிறாா்.
இன்னும் 3 மாதங்கள் தான். பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பின்னா் அமையக் கூடிய திமுக ஆட்சிதான் உண்மையான, மக்களுக்கான, மக்கள் விரும்பக் கூடிய ஆட்சியாக அமையும் என்றாா் அவா்.
கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாா்க்கண்டேயன், குமரகுருபர ராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா் எஸ்.ஜோயல், முன்னாள் எம்.பி. எஸ்.ஆா். ஜெயதுரை, கோவில்பட்டி நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், மாவட்டப் பொறியாளரணி துணை அமைப்பாளா் பீட்டா், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ராஜ்குமாா், மகளிரணி அமைப்பாளா் பிரேமா துரைமுருகன், விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலா் சுப்பிரமணியன், நிா்வாகிகள் சண்முகராஜ், ராமானுஜகணேஷ், ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...