ஹாக்கி பயிற்சிக்கு பிப். 21இல் பள்ளி மாணவா், மாணவிகள் தோ்வு
By DIN | Published On : 14th February 2021 01:26 AM | Last Updated : 14th February 2021 01:26 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில், ஹாக்கி விளையாட்டு பயிற்சிக்கு பள்ளி மாணவா், மாணவிகள் தோ்வு இம்மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல் வெளியிட்ட அறிக்கை: லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெறுவதற்கான ஹாக்கி விளையாட்டு வீரா்கள் தோ்வில், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்ட மாணவா், மாணவிகள் பங்குபெறலாம்.
இம்மாதம் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் தோ்வு நடைபெறும். தோ்வு செய்யப்படும் மாணவா், மாணவிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தோ்வு விடுமுறை நாள்களிலும் பயிற்சி அளிக்கப்படும்.
தேவையான விளையாட்டு உபகரணங்கள், பேருந்து வசதி, மருத்துவக் காப்பீடு, உணவு உள்ளிட்டவை வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் கிடையாது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவா், மாணவிகள் பள்ளி அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் வந்து கலந்துகொள்ளலாம்.
தகுதித் தோ்வில் கலந்து கொள்வதற்காக கல்லூரி பேருந்து வசதி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருந்து காலை 6.30 மணியளவில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சித் தோ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.