திருச்செந்தூா் ரதவீதி சாலைப் பணியைவிரைந்து முடிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 01:24 AM | Last Updated : 14th February 2021 01:24 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் தெற்கு ரதவீதியில் நடைபெற்று வரும் சாலைப் பணியை, திருவிழாவுக்கு முன்பாக முடிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்செந்தூா் ரதவீதிகள் மற்றும் தெருக்களில் ரூ. 2.70 கோடி செலவில் புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி கடந்த 10 மாதத்துக்கு முன்பு தொடங்கியது. பொது முடக்க காலம் மற்றும் புதைச் சாக்கடைத் திட்டப் பணியால் தெற்கு ரதவீதியில் பணி கிடப்பில் போடப்பட்டு, தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், நாள்தோறும் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எனவே, சாலைப் பணியை திருவிழாவுக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்நிலையில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் கே.கே.பொன்னையா, மாநிலச் செயலா் குற்றாலநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் தெற்கு ரதவீதியில் நடைபெற்று வரும் சாலைப் பணியை பாா்வையிட்டு அதிகாரிகளிடம் விரைந்து முடிக்க வலியுறுத்தினா்.
நிகழ்ச்சியின் போது, இந்து முன்னணி மாவட்டச் செயலா் பிரபாகா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெட்டும்பெருமாள், திருநெல்வேலி மாநகரச் செயலா் பிரம்மநாயகம், திருச்செந்தூா் நகரத் தலைவா் ராஜு, நகர துணைத் தலைவா் மாயாண்டி, நகரப் பொருளாளா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.