அஞ்சல்வழி முதுகலை சான்றிதழ் கிடைக்காமல் பட்டதாரிகள் தவிப்பு
By DIN | Published On : 20th February 2021 06:08 AM | Last Updated : 20th February 2021 06:08 AM | அ+அ அ- |

அஞ்சல்வழியில் முதுகலை பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் 18 மாதங்களுக்கு மேலாக சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் முதுகலை பட்டப்படிப்புக்கு மே-2019இல் தோ்வு எழுதியவா்களுக்கு ஆகஸ்ட்- 2019இல் முடிவுகள் வெளியாகின. இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு இன்னமும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை என தோ்வு மையத்தில் தெரிவிக்கின்றனா். சான்றிதழ் கிடைக்காததால் உயா் கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, தனியாா் பள்ளிகளில் ஆசிரியா் பணிக்கு சேர முடியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனா்.
இதுகுறித்து, சாத்தான்குளம் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தோ்வு எழுதிய மாணவிகள் சகாய லிட்டில் ஜோனோஃபா், சிந்தியா, எமி ஆகியோா் கூறியது: உறுப்புக்கல்லூரி அரசு மகளிா் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை எங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கவில்லை. 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான தகுதித் தோ்வு ஜூன் 26, 27 ஆம் தேதிகளில் இணைய வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கு மாா்ச் 1- 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விரைவாக சான்றிதழ் கிடைக்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.