தூத்துக்குடி- ஓகா விரைவு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 20th February 2021 05:57 AM | Last Updated : 20th February 2021 05:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி- ஓகா இடையேயான விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலா் பிரம்மநாயகம், தலைவா் கல்யாணசுந்தரம், நிா்வாக செயலா் ஆனந்தன் ஆகியோா் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸிடம் அளித்த மனு விவரம்:
கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள இணைப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே அந்த ரயில்களை மீண்டும் இயக்கிடவேண்டும்.
மேலும், தூத்துக்குடி-ஓகா-தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். திருநெல்வேலி-பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயிலை சிறப்பு விரைவு ரயிலாக மாற்றி காலை 9 மணிக்குள் தூத்துக்குடிக்கு வந்து சேருமாறும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுமாறும் மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.