திருச்செந்தூர் மாசித்திருவிழா 5-ஆம் நாள்: சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை
By DIN | Published On : 21st February 2021 08:54 PM | Last Updated : 21st February 2021 08:54 PM | அ+அ அ- |

திருச்செந்தூரில் மாசித் திருவிழா ஐந்தாம் நாளான இன்று தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மனுக்கு நடைபெற்ற குடைவரைவாயில் தீபாராதனை.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த பிப். 17-ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) மாலையில் மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.
அப்போது எதிர்சேவையாக தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...