தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 62 கோடியில் திட்டப் பணி: பிரதமா் தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 26th February 2021 08:07 AM | Last Updated : 26th February 2021 08:07 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் ரூ. 62 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் மத்திய அரசின் சாகா் மாலா திட்டத்தின்கீழ் ரூ. 42 கோடி மதிப்பில் நிறைவடைந்த எட்டுவழிச் சாலை மேம்பாலம் மற்றும் ரூ. 20 கோடியில் சூரிய மின்சக்தி பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா். தில்லியிலிருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் வளா்ச்சிக்காக ரூ. 42 கோடியில் கோரம்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் எட்டுவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது, துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறனை வலுப்படுத்தும். மேலும், ரூ. 20 கோடியில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதனால் இத்துறைமுகத்தின் மின்தேவையைப் பெறமுடியும். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் பசுமை துறைமுகம் என்ற அந்தஸ்தை தூத்துக்குடி வஉசி துறைமுகம் பெறும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...