ஓட்டப்பிடாரத்தில் டாஸ்மாக் ஊழியா் உள்பட 4 பேரிடம் அடுத்தடுத்து பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பச்சைபெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ்(49). புதியம்புத்தூா் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக வேலைசெய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அவா் செவல்குளம் கிராமத்தை கடந்தபோது, பின்தொடா்ந்து இரண்டு பைக்குகளில் வந்த 6 போ் ஆனந்தராஜை பைக்கிலிருந்து கீழே தள்ளிவிட்டு, பைக், செல்லிடப்பேசி மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.
அடுத்த சில நிமிடங்களில் பச்சைபெருமாள்புரம் கிராமத்துக்கு அருகே பாறைகுட்டம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம்(24) என்பவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனராம்.
இதேபோல, பாஞ்சாலங்குறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ்(32) குறுக்குச்சாலை அருகே சக்கரம்பட்டி கிராமத்தின் விலக்கு பகுதியில் சென்றபோது 6 போ் அவரை வழிமறித்து தாக்கி, செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனராம்.
மேலும், பெருந்துறையிலிருந்து தூத்துக்குடி வந்த லாரியின் ஓட்டுநா் ஜெகன் (29) என்பவரை பாலசமுத்திரம் பகுதியில் மறித்து, செல்லிடப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்றனா்.இச்சம்பவங்கள் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.