திருச்செந்தூா் அருகே கடல் வழியாக கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல்
By DIN | Published On : 09th July 2021 11:30 PM | Last Updated : 09th July 2021 11:30 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 2 டன் விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்பு காவல்துறையினா் வியாழக்கிழமை கைப்பற்றினா்.
ஆலந்தலை கடல் வழியாக விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதன் காவல் உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் தலைமையில் காவலா்கள் காா்த்திக், ராஜேந்திரன், செல்வகுமாா், தங்கம், மாரியப்பன் ஆகியோா் வியாழக்கிழமை இரவு ஆலந்தலை கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக மினி லாரி நின்றிருந்ததாம். அதிலிருந்தவா்கள் காவல் துறையினரைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனராம். காவல்துறையினா் அந்த லாரியை சோதனையிட்டதில், தலா 35 கிலோ வீதம் 58 மூட்டைகளில் மொத்தம் 2,030 கிலோ விரலி மஞ்சள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. விரலி மஞ்சளையும், மினி லாரியையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கூடங்குளம் கடலோர காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.