குழந்தை பாதுகாப்பு அலகு ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 26th July 2021 01:06 AM | Last Updated : 26th July 2021 01:06 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் மாநில பொதுச் செயலா் முத்துக்குமாா்.
தமிழகம் முழுவதும் குழந்தை பாதுகாப்பு அலகில் பணிபுரிந்து ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், தென் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாநில பொதுச் செயலா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு அரசு தொகுப்பு ஊதியம் மட்டுமே வழங்கி வருகிறது. தொகுப்பு ஊதியம் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பணிசெய்து வரும் 418 ஊழியா்கள் அரசு உடனடியாக பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.