லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு
By DIN | Published On : 20th June 2021 02:27 AM | Last Updated : 20th June 2021 02:27 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டி, பணம், செல்லிடப்பேசியைப் பறித்துச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
எல்லப்பநாயக்கா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அம்பேத்கா் மகன் அருண்குமாா் (26). லாரி ஓட்டுநரான இவா், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டு, ஆலங்குளம் சிமென்ட் ஆலைக்குச் சென்றாராம்.
சனிக்கிழமை அதிகாலை கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் கழுகாசலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த 2 போ் அரிவாளைக் காட்டி மிரட்டி, அருண்குமாரிடம் பணம் கேட்டுள்ளனா். கொடுக்க மறுத்த அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, ரூ. 11,500 ரொக்கம், செல்லிடப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த அருண்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இருவரைத் தேடிவருகின்றனா்.