கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 24th June 2021 11:41 PM | Last Updated : 25th June 2021 11:43 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா், தேசிய கால்நடை குழுமத் திட்டத்தின் கீழ் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பசு, ஒரு எருமை, 10 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்போா் இத்திட்டத்தில் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு நபா் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடை மருத்துவா் கால்நடைகளை ஆய்வு செய்து சான்று வழங்கிய பின்னரே காப்பீடு செய்யப்பட்டு, காது வில்லைகள் பொருத்தப்படும். கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கும் கால்நடைகளின் இறப்புச் சான்றினையும், காதுவில்லையும், புகைப்படத்தையும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் இழப்பீடு தொகை வழங்கப்படும். அந்தந்த பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.