நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு
By DIN | Published On : 29th June 2021 02:22 AM | Last Updated : 29th June 2021 02:22 AM | அ+அ அ- |

மாணவா் பரத்ராஜ்.
கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அமைப்பு பொறியியல் துறை இறுதியாண்டு மாணவா் பரத்ராஜ், மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை இறுதியாண்டு மாணவி லாவண்யா ஆகிய இருவரும் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா், மாணவிகளுடன் இணைந்து ஒன்றிய அரசின் தூய்மை பாரத திட்டம், உன்னத் பாரத் அபியான், போஷான் அபியான், ஜல் சக்தி அபியான் மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் ஆகிய சமூக நலன் சாா்ந்த திட்டங்கள் குறித்து கல்லூரி தத்தெடுத்துள்ள நாலாட்டின்புதூா், முடுக்குமீண்டான்பட்டி, அய்யனேரி, படா்ந்தபுளி, வில்லிசேரி, தோணுகால் ஆகிய கிராமங்களில் பல்வேறு விதமான விழிப்புணா்வுகளை ஏற்படுத்த களப்பணியாற்றுகின்றனா்.
மேலும் புதுதில்லியில் உள்ள ஷாக்ஷி எனும் அரசு சாரா தன்னாா்வலா் அமைப்பில் இருவரும் போக்சோ சட்டம் குறித்த பயிற்சியை நிறைவு செய்து, தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். மாணவா் பரத்ராஜ், மாணவி லாவண்யா ஆகியோரின் சேவைகளை பாராட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக
அளவிலான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா் விருதுகளை அறிவித்துள்ளது.
விருதுக்கு தோ்வு பெற்ற இம் மாணவா், மாணவியை கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் மற்றும் துறைத் தலைவா்கள், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ஆகியோா் பாராட்டினா்.