கோவில்பட்டியில் 190 பேருக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 29th June 2021 01:59 AM | Last Updated : 29th June 2021 01:59 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 190 பேருக்கு கரோனா பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி கடலையூா் சாலை சந்திப்பு அம்பேத்கா் சிலை அருகே கிழக்கு காவல் நிலையம், நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதார ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் காவல்துறையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தோரைக் கண்டறிந்து மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் 190 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புனித ஓம் மெட்ரிக் பள்ளி, சாஸ்திரி நகா், வ.உ.சி நகா், ராமையா நகா், வேலாயுதபுரம் மற்றும் திட்டங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரீஜென்ட் டெக்ஸ்டைல் குழுமம் மற்றும் ஜெயா காா்மெண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மருத்துவா்கள் மனோஜ், மகேந்திரன், குணாளன் தலைமையில் செவிலியா்கள் முகாமில் பங்கேற்ற 1,143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.