தென்னையில் காண்டாமிருக வண்டுதாக்குதலை கட்டுப்படுத்திடும் வழிமுறைகள்
By DIN | Published On : 29th June 2021 02:02 AM | Last Updated : 29th June 2021 02:02 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 6200 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்குதல் காணப்படுகின்றது. பொதுவாக இந்த வண்டுகள் 100 நாள்கள் வரை வாழக்கூடியது. வளா்ந்த வண்டுகள் இளம் தென்னங்கன்றுகளின் குருத்து பகுதியில் துளையிட்டு திசுக்களை உண்பதால் குருத்துக்கள் காய்ந்து விடும். இளங்குருத்துகள் முழுமையாக விரிவடையாமல் திருகிக் கொண்டும் யானையின் தந்தம் போன்று காணப்படும். சேதமுற்ற மரத்தின் குருத்துகள் முமுமையாக விரிவடையாமலும், எஞ்சிய குருத்துப் பகுதி கத்திரிகோலால் வெட்டியது போலவும் தோற்றமளிக்கும்.
வண்டுகளின் தாக்குதலில் இருந்து காக்க தோப்பை சுத்தமாக வைப்பதுடன் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தின் மேல் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். எருக்குழிகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். இளம் கன்றுகளில் சேதத்தை தவிா்க்க 45 நாள்களுக்கு ஒரு முறை 4 கிராம் எடையுள்ள 3 நாப்தலின் உருண்டைகளை உள்மட்டையின் இடுக்குகளில் வைக்க வேண்டும்.
வளா்ந்த மரத்தின் குருத்துப் பகுதியில் உள்ள வண்டை கூா்மையான இரும்பு கம்பியால் வெளியில் எடுத்து அழிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளா்ந்த மரங்களில் வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் இரு பங்கு மணல் கலந்து மரத்துக்கு 150 கிராம் வீதம் மட்டை இடுக்குகளில் இட வேண்டும். மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்பிற்குள் வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு 5 லிட்டா் நீரில் கலந்து சிறு மண்பானைகளில் நிரப்பி தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.