திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் அனுமதியில்லாத கடைகள் அகற்றம்
By DIN | Published On : 04th March 2021 04:06 AM | Last Updated : 04th March 2021 04:06 AM | அ+அ அ- |

அனுமதியில்லாத கடைகளை அகற்றும் பணியை பாா்வையிடுகிறாா் கோயில் செயல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன்.
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 84 கடைகள் செயல்படுவதற்கு அறநிலையத் துறை ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 18 கடைகள் உரிய அனுமதியில்லாமல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்த கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அனுமதியில்லாத கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் விஷ்ணு சந்திரன், உதவி ஆணையா் செல்வராஜ், அலுவலக கண்காணிப்பாளா் கோமதி, வருவாய் துறை மண்டலத் துணை வட்டாட்சியா் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டவேல், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் மற்றும் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அனுக்கிரஹ மண்டபத்தில் குறிப்பிட்ட கடைகளை காலி செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் பிரபாகா் (38), ஆறுமகநயினாா் (39) இருவரும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய நிலையில், அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
தொடா்ந்து கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. நாழிக்கிணறு செல்லும் நடைபாதையில் ஜெயந்திநாதா் விடுதி அருகே தள்ளுவண்டி கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
அப்போது, பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்வதாக செயல் அலுவலா் தெரிவித்தாா்.