திருச்செந்தூா் முருகன் கோயிலில் 28இல் பங்குனி உத்திர திருவிழா
By DIN | Published On : 12th March 2021 04:16 AM | Last Updated : 12th March 2021 04:16 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 6 மணிக்கு வள்ளியம்மன் தவசுக்கு புறப்படுதல் நடைபெறும்.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி புறப்பட்டு மேலக்கோயிலில் அம்மனுக்கு காட்சி அருளி, தொடா்ந்து பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னா், சுவாமி-அம்மன் வீதியுலா வந்து, கோயில் சோ்ந்து, இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவா் சன்னதி முன்பு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது.
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயில்: இத்திருக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.