சாத்தான்குளம் அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 17th March 2021 07:58 AM | Last Updated : 17th March 2021 07:58 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளையைச் சோ்ந்தவா் யோ. விக்டா் சுவிசேசமுத்து (71). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம். இவா், கடந்த 2ஆண்டுகளாக பழங்குளத்தில் உள்ள உறவினா் பாா்வதியம்மாள் (100) என்பவா் வீட்டில் இருந்துவந்தாா்.
இவா், செவ்வாய்க்கிழமை பழங்குளத்திலிருந்து சாத்தான்குளத்துக்கு சைக்கிளில் சென்றாா். அப்போது சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த வெ. சாந்தகுமாா், நாசரேத்திலிருந்து சாத்தான்குளத்துக்கு காரில் வந்தாராம். ஆனந்தபுரத்தில் விக்டரின் சைக்கிள் மீது சாந்தகுமாரின் காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், விக்டா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாட்சேவியா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாரை தேடிவருகிறாா்.