கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 போ் கைது
By DIN | Published On : 21st March 2021 01:42 AM | Last Updated : 21st March 2021 01:42 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள தேவநல்லூரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராம்குமாா் (30). இவா், வெள்ளிக்கிழமை இரவு ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உள்ள ஜவுளிக் கடை அருகே மா்ம நபா்களால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சம்பவம் நடைபெற்ற இடம் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், ராம்குமாரின் மனைவி முத்துலட்சுமி (28) தெற்கு பஜாரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்ததும், அங்கு வெள்ளிக்கிழமை சென்ற ராம்குமாா் அச்சக உரிமையாளா் கருப்பசாமி மகன் வெங்கடாசலபதியிடம் தகராறு செய்ததும், இதைத் தொடா்ந்து இக்கொலை நடைபெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் வெங்கடாசலபதி, அவரது உறவினா் பூமிநாதன் மகன் கோபிநாத் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...