கோவில்பட்டி அருகே நீரில் மூழ்கி மின் ஊழியா் பலி
By DIN | Published On : 25th March 2021 07:33 AM | Last Updated : 25th March 2021 07:33 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற மின்துறை ஊழியா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மீளவிட்டான் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (27). கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக வேலை செய்து வந்த இவா் மற்றும் மின் துறையைச் சோ்ந்த முருகன், பரமசிவம் ஆகிய 3 பேரும் புதன்கிழமை கடம்பூா் அருகே உள்ள கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, கோவில்பட்டிக்கு திரும்பினாா்களாம்.
அப்போது குருமலையில் உள்ள பொய்யாழி அய்யனாா் கோயில் குளத்தில் 3 பேரும் குளிக்கச் சென்றனராம். அதில், ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முருகன் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரும் காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புப் படையினா், நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ரமேஷ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.