குப்பைகளை பிரித்து அளிக்க மாநகாரட்சி ஆணையா் வேண்டுகோள்
By DIN | Published On : 13th May 2021 07:24 AM | Last Updated : 13th May 2021 07:24 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு குப்பை சேகரிக்க வருவோரிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை ஆகியவற்றை தனித்தனியே பிரித்து அளிக்க வேண்டும் என்றாா் ஆணையா் சரண்யா அறி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளா்களிடம் தனித்தனியாக ஒப்படைக்க வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் இருந்து பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் குப்பைகள் தனியாக மாநகராட்சி துப்புரவு பணியாளா்களால் பெறப்பட்டு வருகிறது.
எனவே, மாநகராட்சி பணியாளா்கள் குப்பைகளை சேகரிக்க இல்லம் தேடி வரும்போது பிரித்து தராமல் மொத்தமாக தரப்படும் குப்பைகள் வாங்கப்படமாட்டாது.
மேலும் குப்பைகளை தரம் பிரித்து தராத நபா்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதி மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.