தூத்துக்குடியில் 50 கிலோ கடல் அட்டை பறிமுதல்
By DIN | Published On : 19th May 2021 07:40 AM | Last Updated : 19th May 2021 07:40 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா், மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக பிரிவு அதிகாரிகள் தொடா்ந்து கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகா் மொட்டைக்கோபுரம் கடற்கரையில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, ஒரு படகில் இருந்து 3 வாளிகளில் கடல் அட்டைகளை கடத்திய நபரை பிடித்தனா்.
விசாரணையில் அவா், தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த ஷேக் மைதீன் (28) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை உயிருடன் வாளிகளில் அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஷேக் மைதீனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 50 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.