ரூ. 5 லட்சத்துடன் தலைமறைவான ஓட்டுநா் கைது
By DIN | Published On : 19th May 2021 07:38 AM | Last Updated : 19th May 2021 07:38 AM | அ+அ அ- |

கயத்தாறு அருகே லாரி உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலப்பாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மோகன் (60). லாரி உரிமையாளா். இவரிடம் ஓட்டுநராக கயத்தாறு வட்டம் திருமங்கலக்குறிச்சி மேலத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துபாண்டி (49) பணி செய்து வந்தாராம். இவரது லாரி கோவாவில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடந்த ஏப். 28ஆம் தேதி மதுரைக்கு புறப்பட்டதாம்.
அப்போது மோகனின் நண்பா் சக்திவேல் ரூ.5 லட்சத்தை லாரி ஓட்டுநா் முத்துபாண்டியிடம் கொடுத்து அனுப்பினாராம். லாரி 30ஆம் தேதி மதுரைக்கு வந்தடைந்தது. ஆனால் முத்துபாண்டி, லாரியை நிறுத்திவிட்டு, பணம் ரூ.5 லட்சத்தை கொடுக்காமல் செல்லிடப்பேசியை சுவிட் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மோகன், முத்துபாண்டியை தேடி அவரது சொந்த ஊருக்கு சென்று திங்கள்கிழமை பணத்தை கேட்டாராம். அப்போது முத்துபாண்டி, மோகனை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துபாண்டியை கைது செய்தனா்.
அவரிடமிருந்த ரூ.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.