கோவில்பட்டி கோட்டத்தில் 7.32 லட்சம் வாக்காளர்கள்
By DIN | Published On : 01st November 2021 02:17 PM | Last Updated : 01st November 2021 02:17 PM | அ+அ அ- |

கோவில்பட்டி கோட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
கோட்டாட்சியர் சங்கரநாராயணன் இதனை வெளியிட்டார். அப்போது, கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் அமுதா (கோவில்பட்டி), பேச்சிமுத்து (கயத்தாறு), நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் கோவிந்தராஜன், வசந்த மல்லிகா, மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,29,938 ஆண்கள், 1,35,922 பெண்கள், 28 திருநங்கைகள் என மொத்தம் 2,65,888 வாக்காளர்கள் உள்ளனர். விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,05,309 ஆண்கள், 1,10,065 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2,15,382 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,22,826 ஆண்கள், 1,28,335 பெண்கள், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,51,190வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,32,460 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு படிவங்கள் வழங்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. வாக்காளர்கள் இதைப் பயன்படுத்தி நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், 2021 நவம்பர் 13,14,27 மற்றும் 28 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.