‘சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை’
By DIN | Published On : 01st September 2021 08:38 AM | Last Updated : 01st September 2021 08:38 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுரை வழங்கினாா்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனை போன்றவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும். அதேபோல் ரௌடித் தனம் செய்வோா் மீதும், சட்ட விரோதமாக வெடி பொருள்கள் வைத்திருப்போா், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, காவல் துறையினா் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகாா் மனுக்களை விசாரிக்கும் முறை, காவல் நிலைய ஆவணங்களை பராமரித்தல், குற்றவாளிகளை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் காவல் கண்காணிப்பாளா் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா். கூட்டத்தில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.