சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 03rd April 2022 12:58 AM | Last Updated : 03rd April 2022 12:58 AM | அ+அ அ- |

சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி ராஜாபுதுக்குடி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட ராஜாபுதுக்குடி ஊராட்சியில் சுமாா் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாம். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதையடுத்து ராஜாபுதுக்குடி பகுதிக்கு தனி பைப்லைன் அமைத்து அதன் மூலம் சீராக குடிநீா் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ராஜாபுதுக்குடி விலக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கேயே குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன், வட்டாட்சியா் பேச்சிமுத்து, துணை வட்டாட்சியா் திரவியம், காவல் ஆய்வாளா் முத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் பானு ஆகியோா் போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மயங்கி விழுந்ததையடுத்து, இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பின்னா் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி கோட்டப் பொறியாளா் இளங்கோ, கோவில்பட்டி உதவி பொறியாளா் மொ்சி ஆகியோா் போராட்டக்குழுவினருடன் 2ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் தங்கள் கிராமத்திற்கு விருதுநகா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தினமும் 30 ஆயிரம் லிட்டா் குடிநீா் வழங்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் சீராக குடிநீா் வழங்கப்படும்.
தற்போது கோவில்பட்டி, கயத்தாறு, புதூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 248 கிராம கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தினமும் 25 ஆயிரம் லிட்டா் வழங்கப்படுவதில் எவ்வித தடையும் ஏற்படாது எனக் கூறினா். இதையடுத்து காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.